தவறான பாதையில் பணம் ஈட்டும் உள்நோக்கத்துடன், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பெயரில் போலியான வலைதளம் செயல்பட்டு வருவதாக மத்திய பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau) தெரிவித்துள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையை கண்டறியும் பிரிவு, கிராமின் உதயமிதா விகாஷ் நிகாம் (Gramin Udyamita Vikash nigam) என்ற இணையதளத்தை ஆய்வு நடத்தி அதன் உண்மைத்தன்மைகளை வெளியிட்டுள்ளது.
இந்த இணையதளம் மத்திய சமூக நீதிதுறையின் பெயர் மற்றும் லோகோவை முறைகேடாகப் பயன்படுத்தி, வேலை தேடக்கூடியவர்களுக்கு, பொருத்தமான மத்திய/மாநில அரசு வேலைவாய்ப்பு கிடைக்க உதவுவதாகவும், அதற்கு ₹435 பணம் செலுத்துமாறும் கோரியுள்ளது.
மேலும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தோடு எந்தவித தொடர்பும் இந்த இணையதளம் கொண்டிருக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளது.
வேலை தேடுபவர்கள் இதுபோன்ற ஏமாற்று வலையில் விழ வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய/ மாநில அரசுகளின் இணையதளம் “gov.in” என முடியுமென்றும், தனியார் நிறுவனங்களின் இணையதளம் “.com” என முடியுமென்றும் எடுத்துரைத்துள்ளது.
மேலும், வேலை தேடுபவர்கள் எந்தவொரு விஷயத்திலும் இதுபோன்ற போலி கோரிக்கைகளுக்கு பதிலளிக்கக்கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது.
மேலும், ஏதேனும் அங்கீகரிக்கப்படாத சந்தேகத்திற்குரிய அல்லது மோசடியான தகவல்களைப் பெற்றால், தயவுசெய்து அதை 918799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும், socialmedia@pib.gov.in, Factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு கூறியுள்ளது.
வேலை தேடுபவர்கள் இதுபோன்ற ஏமாற்று வலையில் விழ வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளது