டிசம்பர் 28 ஆம் தேதி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் தெரிவித்தார்.
ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாகராஜன் உதுமான் அலி, குமரவேல், பால்பாண்டி, பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் . வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டினை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தினோம். அதில் கலந்துகொண்ட முதல்வர் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக் கூறினார். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை.
எனவே, கோட்டையை நோக்கி ஜாக்டோ ஜியோ முற்றுகை போராட்டம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மூன்று அமைச்சர்களை கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்வோம் என கூறினார்கள்.
ஆனால், 6 மாத காலம் ஆகியும் நிவர்த்தி செய்யாத பட்சத்தில் நாங்கள் தற்போது வீதிக்கு இறங்கி உள்ளோம். எங்களை அழைத்து முதல்வர் பேச வேண்டும். இல்லை என்றால் இம்மாதம் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும். டிசம்பர் 28 ஆம் தேதி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தார். இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் திரளான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
Click Here to Join: