ஹாங்சு:சீனாவின் ஹாங்சு நகரில், 19வது ஆசிய விளையாட்டு, செப்., 23ல் துவங்கியது; 45 நாடுகளைச் சேர்ந்த, 12,000 பேர் பங்கேற்று வருகின்றனர். நம் நாட்டு சார்பில், 655 பேர் பங்கேற்கின்றனர்.
இம்முறை தடகளம், துப்பாக்கி சுடுதலில் நம் வீரர்கள் – வீராங்கனையர் அசத்தினர். பெண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் மெஹுலி கோஷ், ரமிதா, ஆஷி அடங்கிய அணி, வெள்ளி வென்று, நம் பதக்க கணக்கை துவக்கியது.
துப்பாக்கி சுடுதலில் மட்டும் நம் வீரர்களுக்கு, 7 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என 22 பதக்கங்கள் கிடைத்தன.தடகளத்தில் இந்திய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா – தங்கம், கிஷோர் குமார் – வெள்ளி என இரு பதக்கங்கள் கிடைத்தன.
அவினாஷ், 3,000 மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்திலும்; பாருல், 5,000 மீ., ஓட்டத்திலும்; தஜிந்தர்பால், குண்டு எறிதலிலும் தங்கம் வென்றனர்.
தடகளத்தில் 6 தங்கம், 14 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்கள் கிடைத்தன.
இதுதவிர, வில்வித்தையில், 3 தங்கம், ஸ்குவாஷ் போட்டியில் 2, டென்னிஸ், குதிரை யேற்றத்தில் தலா ஒரு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
கிரிக்கெட்டில் முதன்முறையாக களமிறங்கிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான நம் நாட்டு பெண்கள் அணி, பைனலில் இலங்கையை வீழ்த்தி, முதன்முறையாக தங்கம் வென்றது.
ஆண்களுக்கான ஹாக்கி பைனலில், ஜப்பானை வீழ்த்திய நம் அணி, தங்கத்தை கைப்பற்றியது; தவிர, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றது.
இதுவரை 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என, 95 பதக்கங்களுடன் இந்தியா, பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இன்று நடக்கும் வில்வித்தையில் 3, கபடியில் 2, பாட்மின்டனில் 1, கிரிக்கெட்டில் 1 என, ஏழு பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.
இதன்மூலம் 72 ஆண்டு கால ஆசிய விளையாட்டு வரலாற்றில், நம் நாடு முதன்முறையாக, 100 பதக்கங்களுக்கு மேல் வென்று, சாதிக்க உள்ளது.
இதற்கு முன், 2018ல் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் அதிகபட்சமாக, 70 பதக்கங்கள், அதாவது, 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தோம்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு இதுவரை, 22 தங்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன் 2018ல் 16, 1951ல் 15, 2010ல் 14 தங்கம் வென்றது.