வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்தச் சூழலில் இப்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வருபவர் நர்கீஸ் முகமதி என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதிக்கான நோபல் பரிசு: ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்த வலியுறுத்திப் போராடியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோர்வே நோபல் கமிட்டி கூறுகையில், “நர்கீஸ் முகமதியின் துணிச்சலான போராட்டத்தால் அவர் பல்வேறு விஷயங்களை இழக்க நேர்ந்தது. ஈரானிய அரசு அவரை 13 முறை கைது செய்துள்ளது.. ஐந்து முறை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.. 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 154 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளது. முகமதி இன்னும் சிறையிலேயே இருக்கிறார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
யார் இவர்: ஈரான் நாட்டின் ஜான்ஜான் என்ற இடத்தில் பிறந்த முகமதி, இமாம் கொமேனி சர்வதேச பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலேயே அவர் மற்ற மாணவர்களிடம் இருந்து தனித்தே தெரிந்தார். அப்போது முதலே அவர் சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தார். படிப்பை முடித்த பிறகு, அவர் ஒரு பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இருப்பினும், தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை குறித்த பல செய்தித்தாள்களில் எழுதி வந்தார். கடந்த 2003ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடியால் ஈரானில் நிறுவப்பட்ட மனித உரிமைகளின் பாதுகாவலர் மையத்தில் அவர் இணைந்தார். அப்போது முதல் அவர் பெண் உரிமை, அனைவருக்குமான சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை நடத்தி வந்தார். அவர் கடந்த 2011இல் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார்.
போராட்டம்: இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த முகமதி பின்னர் 2013இல் ஜாமீன் பெற்றார். அதன் பிறகு மரண தண்டனைக்கு எதிரான தனது போராட்டங்களை அவர் தீவிரப்படுத்தினார். இதையடுத்து அவர் மீண்டும் 2015இல் கைது செய்யப்பட்டார். அவரது சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்டது. சிறையில் இருந்த போதும் அவர் அமைதி மற்றும் சமத்துவத்துக்கு குரல் கொடுப்பதை நிறுத்தவில்லை.
சிறையிலும் அவர் அரசியல் கைதிகள், குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்தார். கடந்த ஆண்டு புர்கா விவகாரத்தில் ஈரான் நாட்டின் கலாச்சார போலீசாரால் மஹ்சா அமினி என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அதைக் கண்டித்து முகமதி சிறையிலேயே போராட்டம் நடத்தினார். இதனால் சிறையில் அவருக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அவருக்கும் வெளியுலகிற்குமான தொடர்பைத் துண்டிக்க நடவடிக்கைகள் எடுத்தனர். இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.