2,242 கிராம சுகாதார செவிலியர்கள், ஆய்வாளர்கள் உள்பட 5000 பேர் நியமனம்..

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உள்பட 5000 பேர் நியமனம் செய்யப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பல்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிறப்பு பல் மருத்துவ பிரிவு, கலையரங்கம், பாதுகாவலர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் உள்ள 3 பல் மருத்துவக்கல்லூரிகளால் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள். ரூ.64 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 620 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

மேலும், ரூ.135 கோடி மதிப்பீட்டில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 750 முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்ட உள்ளோம். மொத்தம் ரூ.200 கோடி செலவில் ஆயிரத்து 400 மாணவர்கள் தங்கும் வகையில் 2 விடுதி கட்டிடம் இந்த மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட உள்ளது. விடுதிகள் கட்டும் பணி 1½ ஆண்டுகளில் முடிக்கப்பட்டு திறந்து வைக்க உள்ளோம்.

புதிதாக உருவான ஜே.என்.1 என்ற உருமாறிய கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. கேரளாவில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான குழு பாதிப்பு ஏற்படவில்லை. ஜே.என்.1 என்ற உருமாறிய கொரோனாவால் மிதமான பாதிப்புகள் ஏற்பட்டு 4 நாட்களிலேயே சரியாகி விடுகிறது.

எனவே பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை. இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். கொரோனாவிற்கு தனி வார்டு அமைக்கப்படுமா என சமூக வலைதளங்களில் சிலர் கேட்கிறார்கள். தேவையற்ற பீதியை கிளப்புகிறார்கள். தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் பெரிய பாதிப்பு ஏதும் இப்போது ஏற்படவில்லை. யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 67 லட்சம் பேர் பயன் அடைந்திருக்கிறார்கள் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களும் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்ப போகிறோம்.மிகவிரைவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.

பணியாளர் தேர்வு: தமிழகத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். 1,021 மருத்துவர்கள் தேர்வு தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது கொரோனா கால பணிக்கு மதிப்பெண் வழங்கும் பணி நடந்து வருகிறது. ஜனவரி 20-ம் தேதிக்கு முன்பு இப்பணி முடிக்கப்படும். பணியாளர்களுக்கு பணி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். 983 மருந்தாளுநர்களை தேர்வு செய்வதில் இருந்த 2 வழக்குகள் முடிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 1,200-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது” இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments