நாமக்கல்: ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
- மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும், பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில், அரசு பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
- இத்திட்டத்தில் பயன்பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவியருக்கு, ஆண்டுக்கு, 4,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
- இத்திட்டத்தில் பயன்பெற, ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் வங்கியில், தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி, அவற்றை ஆதார் எண்னுடன் இணைத்திருக்க வேண்டும்.
- ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை, தமது வருமான சான்று மற்றும் ஜாதிச்சான்று நகல்களுடன், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவியரின் விபரங்களை ஈ.எம்.ஐ.எஸ்., (எஜூகேசனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தை நேரிலும், 04286 -280193 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.