வணிகர்கள் பயன்பெறும் வகையிலான, முக்கிய வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
வணிகர்கள், நிறுவனங்கள் வணிகவரி நிலுவை தொகையை செலுத்த புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் கூடிய “சமாதான்” என்ற திட்டத்தை சமீபத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தின்படி, ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராதம் நிலுவையில் இருந்தால், அந்த தொகை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்… மற்ற வணிகர்கள் குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்தி வழக்கில் இருந்து விடுவித்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
வணிகர்கள்: அதாவது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியவை இன்னமும் பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் உள்ளதாலும், நிலுவையை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்த பிரச்சினைக்கு முடிவு காண வணிகர்கள் முன்வந்த நிலையில்தான், நிலுவை தொகையை வசூலிப்பதில் ஒரு சமாதான திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழக வரலாற்றில் முதல் முறை: தமிழக வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.. அரசின் இந்த முடிவால் 1.40 லட்சம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 95,502 வணிகர்கள் நிலுவை தொகை தள்ளுபடியால் பயனடைவார்கள்…
அதைவிட முக்கியமாக, நிலுவை தொகையை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரை அவர்கள் கணக்கில் ஏற்றப்படக்கூடிய திரண்ட வட்டித் தொகையும் (Accrued Interest) முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.
சலுகைகள்: இத்தனை சலுகைகளுடன் முதல்வர் வெளியிட்டிருந்த இந்த திட்டமானது வணிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு முதல் முறையாக இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்கும் வசதி துவங்கப்பட்டுள்ளது. வணிகர்கள் பயன்பெறும் இந்த வசதியை வணிகவரித்துறை அமைச்சர் நேற்று துவக்கி வைத்துள்ளார்..
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிக வரித்துறை வளாகத்தில் வணிக வரி பணியாளர் பயிற்சி நிலையம் வாயிலாக கள அதிகாரிகளுக்கு சமாதான திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பயிற்சி வகுப்பினை, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்துள்ளார். இந்த பயிற்சியில் 1000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு வணிகர்கள் எழுப்பும் சந்தேகத்திற்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது..
சமாதான திட்டம்: வருகிற 31ம் தேதி மதுரை மாவட்டத்தில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி கோட்டங்களை சேர்ந்த வணிகர்ளுக்கு சமாதான திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடக்க போவதாகவும் அறிவிப்பு வெளியாகியிருப்பது, வணிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
Click Here to Join: