உலக வெப்பநிலை அதிகரிக்கும் மக்களுக்கு ஐ.நா எச்சரிக்கை!

அடுத்த 9 ஆண்டுகளில் உலக வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என, ஐ.நா. பருவநிலை மாற்றத்திற்கான குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றத்திற்கான குழுவில், 195 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் இந்தியாவும் ஒன்று. இக்குழு தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை, மனித குலத்திற்கு பல எச்சரிக்கைகளை பிறப்பிப்பது போல அமைந்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பருவநிலை மாற்றம் ஏற்கனவே பூமியின் ஒவ்வொரு மூலையையும் தொட்டு விட்டது. இது பல நூற்றாண்டு மனித அனுபவத்தை தொடர்ந்து மாற்றியமைக்க உள்ளது. வெப்பமயமாதல் அதிகரிக்கும் போது அதன் தாக்கங்கள் தீவிரமடையும். 1.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நினைத்ததை விட முன்பாகவே உயரும் வாய்ப்பு உள்ளது.

2030களின் முற்பகுதியில் பூமி வெப்ப நிலை கூடி, 1.5 ℃ வெப்பமயமாதல் வரம்பை எட்டும். நினைத்ததைவிட 10 ஆண்டுகள் முன்பாகவே இந்த நிலையை எட்ட வாய்ப்பு உள்ளது. உலகம் வேகமாக வெப்பமடைகிறது. உலகளாவிய வெப்பம் 2030ம் ஆண்டில் 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் பாதையில் உள்ளது. இது 2018ம் ஆண்டு திட்டமிடப்பட்டதை விட 10 ஆண்டுகள் முன்பாகவே நடைபெற உள்ளது.

கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 1901 – 1971க்கு இடையில் சராசரியாக ஆண்டுக்கு 1.3 மிமீ என்ற அளவில் கடல் மட்டம் உயர்ந்தது இருந்தது. இது 2006-2018 க்கு இடையில் 3.7 மிமீ / வருடம் என்ற அளவுக்கு கூடியுள்ளது. அதாவது இரண்டு மடங்கை விட வேகமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. உலக சராசரி கடல் மட்டம் 1901 மற்றும் 2018 க்கு இடையில் 0.20 (0.15 முதல் 0.25) மீ அதிகரித்துள்ளது.

1950களில் இருந்து பெரும்பாலான நிலப்பகுதிகளில் வெப்ப உச்சநிலைகள் (வெப்ப அலைகள் உட்பட) அடிக்கடி நடக்கின்றன. அதே நேரத்தில் குளிர் தீவிரங்கள் (குளிர் அலைகள் உட்பட) குறைவாக நடக்கின்றன.
மனிதனால் தான் வெப்பநிலை இந்த அளவுக்கு மாறியுள்ளது.

நகரங்கள் புவி வெப்பமடைதலின் ஹாட்ஸ்பாட்களாக இருக்கின்றன. ஏனெனில் வெப்பத்தை உறிஞ்சி வைக்கும் நீர் நிலைகள், தாவரங்கள் போன்றவை நகரங்களில் குறைவாக உள்ளன. மேலும் கரியமில வாயுக்கள் அதிகம் கலந்ததால் சூரியனிடமிருந்து அதமிக வெப்பம் ஈர்க்கப்படுகிறது.10 வருடங்களுக்கு ஒரு முறை மற்றும் 50 வருடங்களுக்கு ஒரு முறை கடுமையான வெப்பம், கனமழை மற்றும் வறட்சி நிகழ்வுகள் இனி தீவிரமாக மாறும். கடந்த 2000 வருடங்களில் இல்லாத அளவுக்கு மனித செயல்கள் காலநிலையை மோசமாக வெப்பப்படுத்தியுள்ளது.

உலக வெப்பமயமாதல் காரணங்கள்:

பசுமை இல்ல வாயுக்கள் இயற்கையாகவே உற்பத்தியாக கூடியவை. ஆனால் மனதனின் செயல்பாடுகள் இந்த வாயுக்களின் உற்பத்தி மிகவும் அதிகரித்து உள்ளது. பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் செயல்கள்:

  • காடுகளை அழித்தல்
  • பெட்ரோலியம் போன்ற எரிபொருட்களை எரித்தல்
  • விவசாயம் சார்ந்த நிகழ்வுகள்
  • இறந்த உயிரினங்கள் மக்குதல்
  • அனல்மின் நிலையங்கள்
  • வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசுபாடு
  • எரிமலை வெடித்தல்
  • தொழில்மயமாக்குதல்

காடுகளை அழித்தல்:

மரங்கள் கார்பன் டை ஆக்ஸைடினை உள்ளிழுத்துக் கொள்வதால் வளிமண்டலத்தின் தட்ப வெப்பநிலை சீராக உள்ளது. நாம் மரங்களை வெட்டும்போது அதன் உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை முடிவடைகிறது மற்றும் மரங்களில் சேர்ந்துள்ள கார்பன் வெளியாகிறது.

பெட்ரோலியம் போன்ற பொருட்களை எரித்தல்:

பெட்ரோலியம் போன்ற கார்பன் எரிபொருட்களை எரிப்பதால் கார்பன்டை ஆக்ஸைடு வெளியாகிறது.

விவசாயம் சார்ந்த நிகழ்வுகள்:

மாடு ஆடு போன்றவை செரிமானத்தின் போது பெரும்பாலான மீத்தேன் வாயுவினை வெளிவிடுகின்றன. உரங்களில் நைட்ரஜன் கலந்த இருப்பதால் அது நைட்ரஸ் ஆக்ஸைடின் உருவாக்குகிறது.

இறந்த உயிரினங்கள் மக்குதல்:

ஒரு உயிரினம் இறந்த பின் அதனை மக்க வைக்கும் செயல்முறையின் போது அதிலிருந்து கார்பன் வெளிப்படுகிறது. இந்த கார்பன் காற்று, நீர் ,நிலம் என கலந்து கார்பனை டை ஆக்ஸைடினை உருவாக்குகிறது.

அனல்மின் நிலையங்கள்:

அனல்மின் நிலையங்களில் கரிம எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் இதிலிருந்து அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடு வெளியாகிறது.

வாகனங்களினால் எற்படும் மாசுபாடு:

வாகனங்களும் கரிம எரிபொருட்களை பயன்படுத்துவதால் அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடினை உருவாக்குகின்றன.

எரிமலை வெடித்தல்:

எரிமலை வெடிப்பின் போது அதிலிருந்து வாயுக்கள், சாம்பல் மற்றும் நுண்தூசிகள் வெளிப்படும். இந்த வாயுக்களில் உள்ள சல்பர் டை ஆக்ஸைடு உலக வெப்பம் குறைதலிலும் கார்பன் டை ஆக்ஸைடு உலக வெப்பமயமாதலிலும் பங்காற்றுகின்றன

தொழில்மயமாக்குதல்:

வேகமான மக்கள் தொகை பெருக்கத்தால் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக அளவில் எரிபொருட்கள் எரிக்கப்பட்டு உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகின்றன.

உலக வெப்பமயமாதலின் விளைவுகள்:

  • பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் நமது சுற்றுச்சூழலின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கிறது
  • பனிமலைகள் வேகமாக உருகி கடல்நீர் மட்டத்தினை உயர்த்துகின்றன.
  • அடிக்கடி வெள்ளம், மண் அரிப்பு, புயல், என எதிர்பாராத பருவகால மாற்றம் ஏற்படுதல்
  • கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பதால் பவளப்பாறை போன்ற உயிரினங்கள் அழிந்து போகின்றன.
  • நீர் மற்றும் பூச்சிகளால் வரும் நோய்கள் அதிகமாகின்றன.

உலக வெப்பமயமாதலை தடுக்கும் முறைகள்:

  • கரிம எரிபொருட்கள் உபயோகிப்பதை குறைத்தல்.
  • மரங்களை நடுதல்.
  • மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை உருவாக்குதல்.
  • மின்சாரம் தயாரிக்க மிக குறைந்த அளவில் எரிபொருளை பயன்படுத்தும் சாதனங்களை பயன்படுத்துதல்.

நாம் வாழும் நாட்டை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை ஆதலால் சிந்தித்து செயல்படுவோம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments