தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள குரூப்-2, 2ஏ, 4 பதவிகளில் உள்ள காலிப்பணியிட விவரங்களை மனிதவள மேலாண்மைத்துறைக்கும் வருகிற 27-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் 50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 4 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆசிரியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள் என எல்லா துறைகளிலும் காலி பணியிடங்கள் உள்ளன.
பொதுவாக காலி பணியிடங்கள் உருவானால் அதற்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் காலி பணியிடங்கள் குறைந்த அளவிலேயே நிரப்பப்படுவது கடந்த 10 ஆண்டுகளை தாண்டி தொடர்கதையாக உள்ளது. மிக அவசிய அத்தியாவசிய பணியிடங்களில் ஓரளவு ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகிறது.வரும் ஆண்டுகளில் 55,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. இதன்படி ஆண்டு தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடம் இருந்து காலிபணியிட விவரங்கள் பெறப்படும், அதற்கேற்றபடி ஆண்டு அட்டவணை வெளியிட்டு, தேர்வுகள் நடத்தி ஆட்கள் பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள்
அந்தவகையில் 2023-24-ம் ஆண்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை பட்டியலிட வேண்டும் என சமீபத்தில் நடந்த துறைசார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பாக முன்வைக்கப்பட்டு இருக்கிறதாம்.
அதன்படி, மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து துறைசார்ந்த செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் , அனைத்து அரசு துறை செயலாளர்களும் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் உள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் விவரங்களை அனுப்பும் செயல் முறையை விரைவுபடுத்த வேண்டும். மேலும் 2023-24-ம் ஆண்டு வரையில் குரூப்-2, 2ஏ, 4 ஆகிய பணியிடங்களுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை மனிதவள மேலாண்மைத்துறைக்கும் வருகிற 27-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனதெரிகிறது. ஏனெனில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் குரூப் 4 பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றால்,க்கு 10,000 குரூப் 4 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம் ஆகும்.
ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351, 2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398, 2022ம் ஆண்டு அறிவிக்கையன் படி 10,117 என கடந்த 12 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் குறைவான குரூப் 4 பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்தாண்டை விட கூடுதலாக 5,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.