பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பது போலவே, ஆண் குழந்தைக்களுக்கென அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்தான், பொன்மகன் சேமிப்பு திட்டம்… ஆண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் என்று சொல்லக்கூடிய இந்த திட்டத்தில் அப்படியென்ன வசதிகள் உள்ளன தெரியுமா?
பொதுமக்களின் நன்மைக்காக எத்தனையோ வசதிகளையும், சலுகைகளையும் மத்திய அரசு செய்து தந்து வருகிறது.. அதில் நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது சிறுசேமிப்பு திட்டங்களாகும்..
சலுகைகள்:
அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதால், சிறுசேமிப்புகள் எப்போதுமே பாதுகாப்பானவை.. நம்பகத்தன்மை வாய்ந்தவை.. சில சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டித்தொகையானது, வழக்கமான வட்டியை விட அதிகமாகவே உள்ளன. சிலவற்றுக்கு வரிச்சலுகையும் இருக்கின்றன. அந்த வட்டியும் உரிய நேரத்தில் கிடைத்துவிடுகின்றன.
அதுமட்டுமல்ல, எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், அதிக வட்டி விகிதங்கள், கடன் வசதி இப்படி ஏகப்பட்ட வசதிகள் உள்ளதால், பொதுமக்கள், இதுபோன்ற சிறுசேமிப்புகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.
பொன்மகன் சேமிப்பு :
அந்தவகையில், நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் மிகச்சிறந்த திட்டம் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டமாகும்.. தமிழகத்திலேயே ஆண்களுக்கு மட்டும் இருக்கும் சிறுசேமிப்பு திட்டம் இதுவாகும். ஆண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பதற்காக கடந்த 2015-ல் தொடங்கப்பட்டது இந்த அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம்.
10 வயதுக்குட்பட்ட சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) கணக்கை திறக்கலாம்… 10 வயதை பூர்த்தி செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே இந்த திட்டத்தில் கணக்கை துவங்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் குழந்தைக்கு கிடையாது.
எப்படி துவங்குவது:
தமிழ்நாட்டில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் இந்த திட்டத்தை யார் வேண்டுமானாலும் துவங்கலாம்.. தமிழகத்தில் 2 ஆயிரம் தலைமை-துணை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.
தபால் நிலையங்களில், விண்ணப்ப படிவத்தை நிரப்பி தர வேண்டும். மேலும், ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோர்/பாதுகாவலரின் அடையாள சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி, ஆதார் கார்ட், பான் கார்டு, போட்டோ போன்ற ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும். இவைகளை விண்ணப்பித்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆரம்ப வைப்புத்தொகை வெறும் ரூ.500 செலுத்தினால், குழந்தைக்கு பாஸ்புக் தந்துவிடுவார்கள்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 8.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.. எனினும் வருடத்துக்கு வருடம் வட்டி விகிதம் என்பது மாறுபடும். இத்திட்டத்தில் மாதம் ரூபாய் 500 செலுத்தும் ஒரு நபர் மொத்த முதிர்வு காலத்தின் இறுதியில் ரூபாய் 1.83 லட்சம் தொகையினை பெற முடியும்.
தகுதிகள்:
ரூ. 500-ல் வைப்பு தொகையில் துவங்கலாம் என்றாலும், அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை ரூ. 1.5 லட்சம் ஆகும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்கள். ஆனால், அடுத்த 5 வருடங்களை தொகுப்புகளாக அதிகரித்து கொள்ளலாம். ஆண் குழந்தை வளர்ந்து மேஜர் ஆனதுமே, சம்பாதித்த வட்டி உட்பட முழுத்தொகையும் குழந்தைக்கு வழங்கப்படும்.
முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 வருடங்கள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்பது இந்த திட்டத்தின் கூடுதல் அம்சமாகும்.