சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![tnpsc group 2 chennai 2 tnpsc group 2 chennai 2](https://imagesvs.oneindia.com/ta/img/2025/02/hlac-down-1738568838.jpg)
அந்த வகையில் 2024ஆம் ஆண்டு காலியாக உள்ள துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 பதவிகளுக்கு 507 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதே போல உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப்பு 2 ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தது. குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வுகள் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வர்கள் பலரும் ஆர்வத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை கடைசி நாள் எனவும் அறிவித்திருந்தது. இதேபோல ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேர்வர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தை அளித்த நிலையில், அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு செப்டம்பர் 14ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2700 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்த நிலையில், 5.81 தேர்வர்கள் தேர்வெழுதினர். தொடர்ந்து தேர்வுக்கான விடைக்குறிப்பும் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வின் அடிப்படையில் 29,809 பேர் அடுத்த கட்டமாக முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு வரும் எட்டாம் தேதி பிற்பகல் முதன்மை தேர்வின் தமிழ் தகுதித்தாள்தேர்வும், கொள்கை குறி வகையில் விடை அளிக்கும் பொது அறிவு மற்றும் பொது திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு தேர்வு நடைபெறுகிறது. விரிவான விடை அளிக்கும் பொது அறிவு தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் இதற்கான ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்வர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் ( ஓடியார்) விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை அளித்து இந்த ஹால் டிக்கெட்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.