டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அரசுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்:
TNPSC தேர்வு ஆணையம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 பணிகளுக்கு 121 காலியிடங்களும், 2 ஏ பணியிடங்களுக்கு 5097 காலியிடங்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் கட்ட முதன்மை தேர்வு மே மாதம் 21ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு அன்று நடத்தப்பட்டது. தேர்வில் மொத்தம் 9.94 லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஒரு பணியிடத்திற்கு 10 பேர் வீதம் 52,180 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் ஒன்பது மாதங்களுக்கு பின்னர் 2023 பிப்ரவரி 25ஆம் தேதி என்று நடத்தப்பட்டது. முதன்மை தேர்வில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் இரண்டு தாள்கள் தேர்வு எழுத வேண்டியது இருக்கும்.
அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவை. அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனாலும் அப்பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்யவில்லை.இந்தியாவின் மிக கடுமையான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்தக் குழப்பமுமின்றி 10 மாதங்களில் நடத்தி முடிவை வெளியிடுகிறது.
இத்தேர்வுக்கான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அரசு பணிக்கான கனவுடன் தேர்வை எழுதும் போட்டியாளர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்துவதற்கும் முடிவுகளை வெளியிடுவதற்கும் அதிகபட்ச கால அவகாசத்தை எடுத்து வருகிறது. தேர்வர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குரூப் 2, 2A முதன்மை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிட வேண்டும்
என்றும், மேலும் இனிவரும் நாட்களில் குரூப் 1, 2, 2A போன்ற தேர்வுகளை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பத்து மாதங்களுக்குள்ளாகவும், மற்ற தேர்வுகள் ஆறு மாதங்களுக்குள்ளும் நடத்தி முடிவுகளை வெளியிடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.