
நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, ரன்னர் பட்டம் பெற்ற இந்தியா உள்ளிட்ட 10 அணிகளுக்கு பரிசுத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி 240 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதனை எளிதாக சேஸிங் செய்த ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதையடுத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையும், வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதேபோன்று ரன்னர் டைட்டில் பெற்ற இந்திய அணி வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 33 கோடி ஆகும்.
இதேபோன்று ரன்னர் பட்டம் பெற்றுள்ள இந்திய அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 16 கோடி) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6.50 கோடி பரிசுத் தொகையும், லீக் சுற்றுடன் வெளியேறிய 6 அணிகளுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ. 83 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.
20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளன. முன்னதாக 2003 இல் ரிக்கி பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஜோகன்ஸ் பெர்க் நகரில் நடந்த இறுதிப் போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இந்நிலையில், இன்று நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது இந்திய அணியின் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 765 ரன்கள் குவித்துள்ளார்.
Click Here to Join: