டெல்லி: ஆதார் அட்டை பெறுவதற்கு கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என்கிற நிலையில் இனி கைரேகை வழங்க இயலாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம் என்றும், கரு விழி இல்லாதவர்களுக்கு கைவிரல் ரேகை மூலம் ஆதார் வழங்கலாம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தற்போது உள்ள நடைமுறைப்படி ஆதார் அட்டை வாங்க விண்ணப்பித்தால், அவர்கள் கட்டாயம் கைவிரல் ரேகைகள் மற்றும் கருவிழி பதிவு போன்றவை பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தால் மட்டுமே ஆதார் கார்டு வழங்கப்படுகிறது.
இதனிடையே கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கைவிரல்கள் இல்லாததால் அவருக்கு ஆதார் கார்டு வழங்கப்படாத நிலை இருந்தது. இந்த விவகாரம் மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அந்த பெண்ணின் கருவிழி பதிவு மட்டும் பெற்றுக்கொண்டு ஆதார் கார்டு வழங்குமாறு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆதார் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் கோட்டயத்தில் உள்ளே பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று ஆதார் எண்ணை வழங்கினார்கள். இந்த விவகாரத்திற்கு பின்னர் அனைத்து ஆதார் பதிவு மையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதார் அட்டை பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஒருவர் கைரேகை வழங்குவதற்கு இயலாவிட்டால், அவரது கருவிழியை பதிவு செய்து கொண்டு இனி ஆதார் அட்டை வழங்க வேண்டும்.
இதைப்போல கருவிழி பதிவு வழங்க முடியாதவருக்கு கைவிரல் ரேகையை பதிவு செய்து கொண்டு ஆதார் வழங்க வேண்டும். அதேநேரம் கைரேகை மற்றும் கருவிழி பதிவு என இரண்டையுமே ஏதாவது காரணத்தால் வழங்க முடியாதவர்களுக்கும் ஆதார் அட்டை இனி கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழலில் எந்த ரேகையும் பெறாமலும் கைரேகை வழங்கலாம். அது எப்படி என்றால் விரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு இரண்டையும் வழங்க முடியாத நபரின் பெயர், பாலினம், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தாக வேண்டும்.
விரல்கள் அல்லது கருவிழி அல்லது இரண்டும் கிடைக்காததை முன்னிலைப்படுத்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் புகைப்படம் எடுக்கப்பட்டு, ஆதார் பதிவு மையத்தின் மேற்பார்வையாளர் அத்தகைய பதிவை உடடினயாக சரிபார்க்க வேண்டும்.
தேவையான தகவல்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஒவ்வொரு தகுதியான நபருக்கும் பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி பதிவு) வழங்க இயலாமையைப் பொருட்படுத்தாமல், ஆதார் எண் வழங்கலாம். ஆதார் ஆணையம் ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 பேரை மேற்கூறிய விதிவிலக்கான பதிவுகளின் கீழ் பதிவு செய்து வருகிறது

அந்தவகையில் விரல்கள் இல்லாமை அல்லது ரேகை வழங்க இயலாமை மற்றும் கருவிழி இல்லாமை அல்லது 2 வழிகளும் இல்லாதவர்கள் என சுமார் 29 லட்சம் பேருக்கு இதுவரை ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.