Albert Einstein – Biography
விஞ்ஞான ஆர்வமுள்ள இன்றைய மாணவர்களின் ரோல்மடலாகவும் இயற்பியல் அறிஞருமான ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் உடைய வாழ்க்கைக்குறிப்புகள் மற்றும் தத்துவங்களை பற்றி மிகச் சுருக்கமாக இப்பதிவில் பார்க்கலாம் வாங்க….
வாழ்க்கைக்குறிப்பு
பிறப்பு :- 1879 ம் ஆண்டு, மார்ச் 14
தாயகம் :- உல்ம் (ulm) ஜெர்மன் (Germany)
சாதனை :- விஞ்ஞானி, அணுயுகத்தின் தந்தை என போற்றப்பட்டவர்
விருதுகள் :- இயற்பியலுக்கான நோபல் பரிசு (1921)
இறப்பு :- 1955 ம் ஆண்டு, ஏப்ரல் 18, தன்னுடைய 76 வது வயதில் நியூ ஜெர்சியில் (அமெரிக்கா) காலமானார்.
ஜன்ஸ்டீன் தத்துவங்கள் நமது மூளையை சிந்திக்க தூண்டும்
ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் 1879 ம் ஆண்டு மார்ச் 14 ல் ஜெர்மனியின் வூர்ட்டம்பேர்க் (Wurttemberg) என்னும் நகரிலுள்ள உல்ம் (ulm) என்னும் இடத்தில் பிறந்தார்
இவருடைய தந்தையார் ஹேர்மன் ஜன்ஸ்டீன் (Herman Einstein). தயார் போலின் கோச் (Pauline Koch)
ஜன்ஸ்டீன் பிறந்த இரு மாதங்களுக்கு உள்ளாகவே இவரது குடும்பம் ஜெர்மனியின் முனிச் (Munich) என்னும் நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு தாய் தந்தை அரவணைப்பில் வளர்ந்தார்.
டிசம்பர் 27,1999 ஆம் ஆண்டு வெளியான டைம்ஸ் இதழில் ‘person of the century’ அதாவது ‘இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ என்ற கவுரவத்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்க்கு வழங்கியது. டைம்ஸ் இப்படி புகழாரம் சூட்டியதற்கு அவர் மிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானி என்பது மட்டும் காரணமல்ல, அவர் தன் வாழ்நாளில் சிறந்த மனிதராகவும் வாழ்ந்திருக்கிறார் என்பதும் தான். அப்படிப்பட்ட மாமனிதரைப் பற்றித்தான் இந்தக்கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இளமைப்பருவம்
மார்ச் 14, 1879 ஆம் நாள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனி நாட்டில் வுர்ட்டெம்பர்க்கில் உள்ள உல்ம் எனும் இடத்தில் பிறந்தார். தந்தை : ஹேர்மன் ஐன்ஸ்டீன், தாயார் : போலின் கோச். தன்னுடைய இளம் வயதில் அனைவரும் விரும்பும் புத்திசாலி பிள்ளையாக ஐன்ஸ்டீன் இருக்கவில்லை. அவரது 5 வயதில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவரது அப்பா ஹேர்மன் திசைகாட்டும் திசைமானி ஒன்றை அளித்தார். இது என்னவென்று கேட்ட ஐன்ஸ்டீனிடம் ‘இதுதான் திசைகாட்டும் கருவி. இதை நீ எப்படி பிடித்தாலும் திருப்பினாலும் இதற்குள் இருக்கும் முள் வடக்கு திசை நோக்கியே இருக்கும். இதைத்தான் கடலில் பயணம் செய்திடும் மாலுமிகள் பயன்படுத்துவார்கள்’ என்றார்.
ஒன்றுமே அருகில் இல்லாத போது எப்படி இதற்குள் இருக்கும் முள் சரியாக வடக்கு திசையை நோக்கி காட்டுகிறது என்பது குறித்து சிந்தித்துக்கொண்டே இருக்க ஆரம்பித்தார். அப்படி ஒருமுறை ஐன்ஸ்டீன் பெரும் யோசனையில் ஆழ்ந்திருந்தபோது அவரது மாமா கிண்டலாக ‘பாருங்கள் ஐன்ஸ்டீன் யோசித்துக்கொண்டு இருக்கிறான். பெரும் விஞ்ஞானியாக மாறப்போகிறான்’ என சொன்னார். இதனால் கொதித்துப்போன ஐன்ஸ்டீன் அம்மா ‘ஆமாம், என் மகன் ஒருநாள் பெரிய அறிவாளியாக வருவான். பலருக்கும் பாடம் எடுக்கும் பேராசியராக வருவான்’ என தன் தம்பிக்கு பதிலடி கொடுத்தார். அவர் அப்போது தன் மகனை பிறர் ஏளனம் செய்வதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் அப்படி சொல்லியிருந்தாலும் கூட பின்னாளில் அதுவே உண்மையாகவும் மாறிப்போனது.
பள்ளியை விரும்பாத ஐன்ஸ்டீன்
நாம் மேதையாக பார்க்கும் ஜன்ஸ்டீன் உண்மையில் பள்ளிக்கு செல்வதில் அக்கறை இல்லாதவர். பள்ளியை பற்றிய அவரது எண்ணம் இப்படித்தான் இருந்தது ‘பள்ளி என்பது ஒரு ராணுவம். இங்கு ஆசிரியரே அதிகாரி. அவர் சொல்வதே வேதவாக்கு. ஒருவர் போலவே மற்றவரும் இருக்க வேண்டும். அங்கு தனித்தன்மை என்பதே இல்லை’.
வீட்டில் அவரது அம்மா வயலின் வாசிப்பார். தனது மகனும் வயலின் வாசிக்கவேண்டும் என விரும்பிய அவர் இவரை ஒரு ஆசிரியரிடம் சேர்த்துவிட்டார். ஐன்ஸ்டீன் வயலின் அருமையாக வாசிப்பார். ஆனால் ஏற்கனவே இருப்பதை மனப்பாடம் செய்து வாசிப்பதில் அவருக்கு இஷ்டம் இல்லை, அவராகவே ராகங்களை வாசிப்பார்.
ஐன்ஸ்டீன் அவர்களின் குடும்ப நண்பர் இரண்டு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார். ஒன்று இயற்பியல் சம்பந்தப்பட்டது மற்றொன்று ஜியோமெட்ரி சம்பந்தப்பட்டது. இந்த இரண்டு துறைகளும் ஐன்ஸ்டீன் க்கு மிகவும் நெருக்கமானவை. சில நாட்களிலேயே அதில் இருக்கும் கணக்குகள் குறித்து நண்பருடன் பகிர்ந்துகொள்ள அவரை அழைத்தார்.
ஐன்ஸ்டீன் தொடர்ச்சியாக கேள்வி கேட்பதனால் அவரது நண்பர்களும் கெட்டுப்போகிறார்கள் என்று கூறி பள்ளியை விட்டு நின்றுவிடுமாறு தலைமை ஆசிரியர் கூற பள்ளியை விட்டு நின்றார். பின்னர் போர் சூழல் காரணமாகவும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும் இத்தாலிக்கு ஏற்கனவே சென்றிருந்த தனது பெற்றோரிடம் சென்று சேர்ந்தார்.
பின்னர் ஒரு வழியாக ஸ்விஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு எழுதி அதில் தோற்றும் போனார். தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் கணிதத்தில் நல்ல மதிப்பெண்ணை பெற்று இருந்தார். ஆகவே அதன் தலைமை ஆசிரியர் கணிதத்தில் உனக்கு நல்ல திறமை இருக்கிறது. அராவ் என்ற ஊரில் இருக்கும் ஆசிரியரிடம் சென்று படித்தால் நீ எளிதில் தேர்ச்சி அடைந்திட முடியும் என சொல்ல அங்கே சென்றார். அந்தப்பள்ளி ஐன்ஸ்டீன்க்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கு பயின்றதற்கு பின்னர் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.
பயனளித்த காப்புரிமை வேலை
நண்பர் ஒருவரின் உதவியுடன் காப்புரிமை அலுவலகத்தில் குமாஸ்தா வேலைக்கு சென்றார். காப்புரிமை கோரி வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களை வாசித்து அதில் உகந்தவற்றை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையை பார்த்து வந்தார் ஐன்ஸ்டீன். இந்த வேலை காரணமாக பல்வேறு அறிவியல் ஆய்வுகளை படிக்கும் பெரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஐன்ஸ்டீன் அடுத்ததாக தன்னுடன் பயின்ற மிலேவாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஹான்ஸ் ஆல்பர்ட் பிறந்தார்.
தனது வேலை நேரம் போக மீத நேரங்களில் ஆய்வறிக்கைகள் தயாரிப்பதில் அக்கறை செலுத்தினார். 1905 ஆம் ஆண்டு தனது முக்கிய நான்கு ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். சுமார் 16 வருடங்கள் கழித்து இந்த நான்கு அறிக்கைகளில் ஒன்றிற்கு தான் நோபல் பரிசு கிடைத்தது. அந்த சூழ்நிலையில் இவரது ஆய்வறிக்கையை சிலர் கொண்டாடினார்கள், சிலர் விமர்சனம் செய்தார்கள்.
முக்கியமான ஆய்வு முடிவுகள்
E=mc2 இந்த பார்முலாவை படிக்காத மாணவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த பார்முலாவிற்கு சொந்தக்காரர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1905 ஆம் ஆண்டு பிரௌனியன் இயக்கம், சிறப்பு சார்புக் கோட்பாடு, ஒளி மின்விளைவு, E=mc2 என்ற நிறை ஆற்றல் சமநிலை விதி என்ற நாடு கோட்பாடுகளை வெளியிட்டார். இது மட்டுமல்ல, இன்னும் பல சாதனைகளை அவர் அறிவியலில் நிகழ்த்தினார். 1921 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஐன்ஸ்டீன் வென்றார். ஒளிமின் விளைவை (photoelectric effect) விளக்கியதின் விளைவாகவே இந்த பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த மனிதர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றியவுடன் அமெரிக்காவில் இருந்த ஐன்ஸ்டீன் நாடு திரும்பவே இல்லை. அதுமட்டுமல்ல, ஜெர்மனியில் மனிதர்களை அழித்தொழிக்கும் பேராயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன என ஐன்ஸ்டீன் அவர்களின் ஒப்புதலுடன் கடிதம் அனுப்பப்பட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்பட்டது. இதன் பிறகே, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் புதிய வியூகங்கள் அமைத்தார், அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. போரின் முடிவுகள் மாற்றப்பட்டன.
டைம்ஸ் இதழில் சொல்லப்பட்டது போல ஐன்ஸ்டீன் ஒரு சிறந்த மனிதர். ஆமாம், அவர் அறிவியலைத்தாண்டி அரசியல், சமூகம்,சேவை , தத்துவம் என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார். யூதர்களின் நலனுக்காக பெரிய அளவில் போராடியவர் தன்னை ஒரு பொதுநலவாதி என வெளிப்படையாகவே அறிவித்தார். கடைசிவரை எளிமையின் உறைவிடமாய் வாழ்ந்து மறைந்த ஐன்ஸ்டீனிடம், அமெரிக்காவில் இந்தியத் தூதராக இருந்த மேத்தா, ”நீங்கள் மகாத்மா காந்தி போன்றவர்” என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், ”தயவுசெய்து, என்னை அவரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவர், மனிதகுலத்துக்காக நிறைய தொண்டு செய்திருக்கிறார். நான் என்ன செய்திருக்கிறேன்? ஏதோ, சில விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றார், அடக்கத்துடன்.