இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு, கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அந்த சிலையை திறந்து வைத்தார்.
குமரி கடலில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து கால் நூற்றாண்டு அதாவது 25 ஆண்டுகள் அடைவதைத் தொடர்ந்து, வள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசு வெள்ளி விழா கொண்டாடிவருகிறது. நேற்று (30ம் தேதி) முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரையிலான மூன்று நாள்கள் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வெள்ளி விழா காணும் வள்ளுவர் சிலையை எளிதில் காண கடலுக்கு நடுவே விவேகானந்தர் பாறையை வள்ளுவர் சிலை பாறையுடன் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது. 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கண்ணாடி பாலம் ரூ. 37 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்தக் கண்ணாடி பாலத்தை நேற்று (30ம் தேதி) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்தியாவில் கடலுக்கு நடுவில் கட்டப்பட்ட முதல் கண்ணாடி பாலம் எனும் சிறப்பையும் குமரி கண்ணாடி பாலம் பெற்றுள்ளது. இந்தப் பாலத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தப் பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார். இவருடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.