தாய்லாந்து, இலங்கை நாடுகளைத் தொடர்ந்து மலேசியாவுக்கும் இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என்ற அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகு சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாகச் சுற்றுலாத் துறையை நம்பி இருந்த நாடுகள் மீண்டும் வெளிநாட்டுப் பயணிகள் ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இப்போது முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விசா தேவையில்லை: 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியாவுக்குச் சென்று வரலாம். இந்தியர்கள் மற்றும் சீன நாட்டினருக்கு இந்த விதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மலேசியாவுக்கு நீங்கள் செல்லும் போது, 30 நாட்களுக்குள் குறைவாக அங்கே தங்குவதாக இருந்தால் அதற்காகத் தனியாக விசா பெறத் தேவையில்லை.
ஏற்கனவே இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது மலேசியாவும் விசா தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், துருக்கி மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மலேசியா செல்ல விசா தேவையில்லை என்ற நிலையில், இப்போது அதில் இந்தியா மற்றும் சீனாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரு கண்டிஷன்: அதேநேரம் ஏற்கனவே குற்றவியல் வழக்குகளைக் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் விசா பெற்றே மலேசாவுக்கு செல்ல முடியும். இந்த விசா விலக்கு குறித்த விரிவான விவரங்கள் மற்றும் விதிமுறைகளை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் விரைவில் அறிவிப்பார் என்று மலேசியப் பிரதமர் அன்வார் கூறினார்.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே நீண்ட கால உறவு இருக்கிறது. இரு நாடுகளும் இடையே 66 ஆண்டுக்கால தூதரக உறவு இருக்கிறது. கடந்த 2022இல், மலேசியாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகள் லிஸ்டில் 11ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. மலேசியாவில் ஏற்கனவே கணிசமான அளவில் இந்தியர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனா: முன்னதாக கடந்த நவம்பர் 24ஆம் தேதி மலேசியர்கள் தங்கள் நாட்டில் 15 நாள் வரை விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ளலாம் என்று சீனா அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் சீனாவைச் சேர்ந்தவர்களும் மலேசியாவுக்கு 30 நாட்கள் வரை இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.