காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 207 போ் உயிரிழந்தனா்; 338 போ் காயமடைந்தனா்.இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 22,185-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 57,305 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், உயிரிழந்தவா்களில் எத்தனை போ் ஹமாஸ் படையினா், எத்தனை போ் பொதுமக்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.தங்கள் நாட்டுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினா் தாக்குதல் நடத்தி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததற்குப் பிறகு, அந்த அமைப்பினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இதுவரை 8,000 ஹமாஸ் படையினா் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
அத்துடன், மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தாலும், அந்தப் பகுதியில் குடியேறியுள்ள இஸ்ரேலியா்களாலும் அக். 7-ஆம் தேதியிலிருந்து இதுவரை 321 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.