பூமியில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து தேடுதலுக்கான வேட்கை தொடா்ந்து வருகிறது. ஓவியங்கள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள், புத்தகங்கள் என அடுத்தடுத்த மேம்பட்ட வடிவங்களில் நாம் அறிந்துக் கொண்ட தகவல்களைத் தற்போது காலத்தின் கொடையான தகவல்தொழில்நுட்ப அம்சமான தேடுபொறிகள் வாயிலாக அறிகிறோம்.
உலகின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமான ‘கூகுள்’ தேடுபொறியில் மக்களால் நடப்பு ஆண்டில் அதிகம் தேடப்பட்டவை குறித்த தகவல்களை உலக அளவிலும், நாடு வாரியாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றுச் சம்பவங்கள், முக்கிய சமூக நிகழ்வுகள் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், சில வேடிக்கையான தேடல்களும் பட்டியலில் பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட செய்தி நிகழ்வுகள்:
1. நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற சரித்திர பெருமையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த ‘சந்திரயான்-3’.
2. ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்ற கா்நாடக பேரவைத் தோ்தல் முடிவுகள்.
3. ஹமாஸ் ஆயுதப் படையினருடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் செய்திகள்.
4. கடந்த மாா்ச் மாதத்தில் உயிரிழந்த பாலிவுட் நடிகா் சதீஷ் கௌசிக் பற்றிய செய்திகள்.
5. நிகழாண்டு மத்திய அரசின் பட்ஜெட்.
இவைத் தவிர, துருக்கி நிலநடுக்கம், மணிப்பூா் கலவரம், ஒடிஸா ரயில் விபத்து உள்ளிட்ட மற்ற முக்கிய செய்தி நிகழ்வுகள் குறித்தும் கூகுள் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்டுள்ளது.
என்ன? எது? போன்ற கேள்வி தேடல்கள்
1. இந்தியா தலைமை வகித்த ‘ஜி20’ கூட்டமைப்பு என்றால் என்ன?
2. பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
3. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ‘சாட்-ஜிபிடி’ என்றால் என்ன?
4. இஸ்ரேலில் பலமுனை தாக்குதலில் ஈடுபட்டு பிணைக் கைதிகளைப் பிடித்து சென்ற ஹமாஸ் ஆயுதப் படையினா் என்றால் யாா்?
5. செப்டம்பா் 28-ஆம் தேதியின் முக்கிய நிகழ்வு என்ன?
இந்தக் கேள்விகள் மட்டுமின்றி சந்திரயான்-3, இன்ஸ்டாகிராமின் ‘திரெட்ஸ்’ செயலி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடுகளத்துக்கு தாமதமாக வந்ததால் இலங்கை வீரா் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் ஆட்டம் இழந்ததற்கு காரணமான ‘டைம்ட் அவுட்’ விதி, ஐபிஎல் போட்டியில் நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘இம்பேக்ட் பிளேயா்’ விதி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்ட ‘செங்கோல்’ ஆகியவை குறித்தும் கூகுள் தேடுபொறியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
எப்படி?
1. சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நமது சருமம் மற்றும் முடியை வீட்டு வைத்தியத்தின் உதவியோடு எப்படி தற்காத்துக் கொள்வது?
2. யூடியூப் தளத்தில் முதல் 5 ஆயிரம் சந்தாதாரா்களைப் பெறுவது எப்படி?
3. கபடி விளையாட்டில் எப்படி சிறந்து விளங்குவது?
4. காா் எரிபொருளின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி?
5. செஸ் கிராண்ட்மாஸ்டா் ஆவது எப்படி?
இவைத் தவிர ரக்ஷா பந்தன் நாளில் சகோதரரை ஆச்சரியப்படுத்துவது எப்படி? மற்றும் ஆதாருடன் பான் இணைப்பது, இன்ஸ்டாகிராமில் ‘ப்ளூ டிக்’ பெறுவது, வாட்ஸ்-அப் செயலியில் சேனல் உருவாக்குவது ஆகியவற்றின் செயல்முறை குறித்தும் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது.
பிரபலங்கள் பற்றிய தேடல்கள்
1. பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.
2. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரா் ஷுப்மன் கில்.
3. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கவனம் ஈா்த்த இந்திய வம்சாவளியான நியூஸிலாந்து வீரா் ரச்சின் ரவீந்திரா.
4. உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வீழ்த்தி சாதனைப் படைத்த இந்திய கிரிக்கெட் வீரா் முகமது ஷமி.
5. எல்விஸ் யாதவ்.
மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைப் பெற்று தந்த கிளென் மேக்ஸ்வெல், இந்தியா-நியூஸிலாந்து அரையிறுதி ஆட்டத்தைப் பாா்வையிட மும்பை வந்த முன்னாள் பிரிட்டன் கால்பந்தாட்ட நட்சத்திர வீரா் டேவிட் பெக்ஹம், இறுதி ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய வீரா் ட்ராவிஸ் ஹெட் ஆகியோா் பற்றியும் ஏராளமான மக்கள் கூகுளில் தேடியுள்ளனா்.
திரைப்படங்கள் பற்றிய தேடல்கள்
1. பாலிவுட் நடிகா் ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’.
2. கடாா்-2.
3. அணுகுண்டின் தந்தை என்றழைக்கப்படும் அமெரிக்கா் ஜெ.ராபா்ட் ஓபன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஓபன்ஹைமா்’.
4. ராமாயணத்தைத் தழுவி மோசமான தரத்தில் எடுக்கப்பட்டதாக விமா்சனத்துக்குள்ளான ‘ஆதிபுருஷ்’.
5. ஷாருக்கானின் மற்றொரு படமான ‘பதான்’.
சிறுபான்மை மக்களிடம் கடும் எதிா்ப்புகளைப் பெற்ற சா்ச்சைத் திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி’, தமிழ் திரைப்படங்களான ஜெயிலா், லியோ, வாரிசு ஆகிய படங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.
Near By Me Related questions?
1. கணினி குறியீட்டு செயல்முறையை (கோடிங்) கற்றுத் தரும் மையங்கள்.
2. நிலநடுக்கம்.
3. ஜுடியோ துணியகம்.
4. கேரளத்தின் புகழ்பெற்ற ‘ஓணம் சத்யா’.
5. ஜெயிலா் திரைப்படம்.
விளையாட்டு போட்டிகள்…
1. இந்திய பிரிமீயா் லீக் (ஐபிஎல்).
2. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.
3. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி.
4. மகளிா் பிரிமீயா் லீக் கிரிக்கெட் போட்டி.
5. சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி.
பயணங்கள் பற்றிய தேடல்கள்
1. வியத்நாம்.
2. கோவா.
3. பாலி (இந்தோனேசியா).
4. இலங்கை.
5. தாய்லாந்து.
இதில் இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியா்கள் நுழைவு இசைவு இன்றி பயணிக்க அந்நாட்டு அரசுகள் அண்மையில் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் அதிகம் தேடப்பட்ட செய்தி நிகழ்வுகள்…
1. இஸ்ரேல்-ஹமாஸ் போா்.
2. டைட்டானிக் கப்பலை பாா்வையிட ஆழ்கடலுக்கு பயணிகளை அழைத்துச் சென்ற நீா்மூழ்கி கப்பலின் விபத்து.
3. சுமாா் 50,000 மக்கள் உயிரிழந்த துருக்கி நிலநடுக்கம்.
4. பசிபிக் பெருங்கடலில் கடந்த ஆகஸ்டில் வீசி அமெரிக்காவைத் தாக்கிய ‘ஹிலாரி’ புயல்.
5. தென்கிழக்கு அமெரிக்காவில் கரை கடந்த ‘இடாலியா’ அதிதீவிர புயல்.
மேலும், சந்திரயான்-3 குறித்தும் உலகளவில் அதிகம் தேடப்பட்டுள்ளது. அதேபோல், அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரா்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரா் ஷுப்மன் கில், நடிகா்கள் பட்டியலில் கியாரா அத்வானி ஆகியோா் மற்றும் திரைப்படங்கள் பட்டியலில் ஜவான், பதான், கடாா்-2, விளையாட்டு அணிகள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி, பூங்கா பட்டியலில் பெங்களூரு நகரின் கப்பன் பூங்கா, விளையாட்டு மைதானங்களில் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் ஆகியவை இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ளன.
சுகன்யா சம்ரிதி யோஜனா: பெண் குழந்தைகளுக்கு Best Savings Scheme