விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை செலுத்தி வரும் தமிழக அரசின் மின்வாரியம், தற்போது இன்னொரு அதிரடியை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5, 2020-ல், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் ஒன்றினை கொண்டுவந்திருந்தது. அதன்படி, விவசாயிகள் இலவச மின்சாரம் பெறவேண்டுமானால், அரை ஏக்கர் நிலம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், அத்துடன், ஆகஸ்ட் 5, 2020க்கு பிறகு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டும்தான் இந்த திருத்தம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சர்ப்ரைஸ் : இந்த அறிவிப்பினால், 2020 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்த, கிட்டத்தட்ட 4 லட்சம் விண்ணப்பதாரர்கள் பெரும் ஏமாற்றமடைந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்ப சர்ப்ரைஸ் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்பில், “புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தமானது 2020 ஆகஸ்ட் 5க்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முன்பு விண்ணப்பம் செய்திருந்தால் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது, அதனால், கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் தரவேண்டும்” என்று தமிழக மின்வாரியம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. இந்த அறிவிப்பானது, விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மின்சாரத்துறை: அதுமட்டுமல்ல, 2023 -24ம் நிதியாண்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று, மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த, செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பையடுத்து, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் துவக்கி வைத்திருந்தார்.. அந்தவகையில், திமுக அரசு இந்த முறை பொறுப்பேற்றதிலிருந்து, அதாவது, இந்த 2 வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகள்: நடப்பு நிதியாண்டில் 50000 விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்திதன்படி, சீனியாரிட்டி அடிப்படையிலேயே மின் இணைப்பு வழங்கப்படுகிறது.. ஆனால் இதுவரை 50 சதவீதம் கூட மின் இணைப்புகள் வழங்கப்படவில்லையாம்.
தமிழகத்தில் பருவமழையால் திடீரென ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, கனமழை போன்ற காரணங்களினால் பல மாவட்டங்களில் வினியோக பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.. இதனால், புதிய மின் இணைப்பு வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுவிட்டது. எனவேதான், வரும் மார்ச் மாதத்திற்குள் விவசாய மின் இணைப்புக்களை முடிக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறதாம்.