
விவசாயிகளின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும், சலுகைகளையும் மத்திய அரசு வழங்கி வரும்நிலையில், இன்னொரு அதிரடியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள குறு, சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், “பிரதமர் கிசான் சம்மான் நிதி” (பிஎம் கிசான்) திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தொடங்கி நடத்தி வருகிறது. குறு, சிறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
வங்கிக்கணக்கு: இதன்படி, பயிர் சாகுபடி செய்வதற்கான நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணையாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.. இந்த திட்டத்துக்காக நடப்பு 2023-24 நிதி ஆண்டுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு: அதுமட்டுமல்ல, சிறு விவசாயிகளுக்கான வருடாந்திர நிதி உதவியை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.
இதுஒருபுறம் இருந்தாலும், விவசாயிகளுக்கு நல்ல விதைகள் கிடைக்கவும், அவர்கள் தங்கள் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யவும், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் முன்னேற்றம் அடையவும், புதிய கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசு அமைத்து வருகிறது. இப்படி எண்ணற்ற வசதிகளை விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செய்து வரும்நிலையில், இன்னொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒப்புதல்: அதன்படி, 2024-2025-ம் ஆண்டிற்கான ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, 2024-25-ம் ஆண்டு சந்தைப்படுத்தல் பருவத்திற்கான அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்த தற்போது ஒப்புதல் அளித்துவிட்டதாம்.
அதுமட்டுமல்ல, குறைந்தபட்ச ஆதரவு விலை முழுமையான உயர்வானது பருப்பு (மசூர்) ஒரு குவிண்டாலுக்கு ரூ.425 ஆகவும், ராப்சீட் – கடுகு குவிண்டாலுக்கு ரூ.200 ஆகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, கோதுமை, குங்குமப்பூவிற்கு, குவிண்டாலுக்கு தலா ரூ.150யும், பார்லி, பருப்புகளுக்கு முறையே குவிண்டாலுக்கு ரூ.115 மற்றும் குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்தவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
டபுள் குஷி: மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதன்மூலம், விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை விவசாயிகளால் உறுதி செய்ய உதவும்.. எனவே, இந்த விலை உயர்வால், விவசாயிகள் பெருமளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.